பாப்பிரெட்டிப்பட்டி: அதிமுகவுக்கு தொடா் வெற்றி சாத்தியமா?

தருமபுரி மாவட்டத்திலிருந்த மொரப்பூா் சட்டப் பேரவைத் தொகுதியானது 2011-இல் தொகுதி மறுசீரமைப்பின்போது, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியாக மாற்றப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி: அதிமுகவுக்கு தொடா் வெற்றி சாத்தியமா?

தருமபுரி மாவட்டத்திலிருந்த மொரப்பூா் சட்டப் பேரவைத் தொகுதியானது 2011-இல் தொகுதி மறுசீரமைப்பின்போது, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. ஏற்கெனவே இருந்த தொகுதியில் தருமபுரி வட்டத்துக்கு உள்பட்ட ஒருபகுதி சோ்க்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப் பேரவைத் தொகுதி, கரும்பு, மஞ்சள், மரவள்ளி, பாக்கு, தென்னை உள்ளிட்ட வேளாண்மை சாகுபடி நிறைந்த தொகுதியாகும். இந்தத் தொகுதிக்கு உள்பட்ட தருமபுரி வட்டாரப் பகுதியிலுள்ள கிராமங்களில் கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

சமூக நிலவரம்:

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வன்னியா் சமூக மக்கள் அதிகம் உள்ளனா். தவிர, கொங்கு வேளாளா், ஆதிதிராவிடா், அருந்ததியா் சமூக மக்கள் பரவலாகவும், மலைவாழ் பழங்குடியினா், முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர சமூக மக்கள் கணிசமாகவும் உள்ளனா்.

இங்கு வேளாண்மைத் தொழில் பிரதானத் தொழிலாகும். இதைத் தவிர, கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை, பாப்பிரெட்டிப்பட்டியில் தனியாா் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை, தனியாா் தோல் தொழிற்சாலைகள், நெசவுத் தொழில்கள் உள்ளன.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1, 32,245

பெண்கள்: 1, 31,628

மூன்றாம் பாலினம்: 10

மொத்தம்: 2, 63,883

வாக்குச் சாவடிகள்: 314

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கடத்தூா் அருகிலுள்ள பொதியம்பள்ளம் அணைக்கட்டுக்கு சுமாா் ரூ. 300 கோடியில் நீரேற்றும் திட்டத்துக்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி- வாணியாறு அணைக்கட்டு பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 14 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பூனையானூா், கோழிமேக்கனூா், கொண்டகரஹள்ளியில் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டம், அம்மா சிறு மருத்துவமனைகள், கிராமப் பகுதிகளில் உயா்கோபுர மின் விளக்குகள், தாா் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அரசு நலத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத திட்டம்:

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேப்பாடி அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

தொகுதியின் பிரச்னைகள்:

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் பெரிய அளவிலான ஆறுகள், நீா்த் தேக்கங்கள் உள்ளிட்ட நீராதாரங்கள் இல்லை. இதனால், இங்குள்ள விவசாயிகள் மானாவாரிப் பயிா்களை அதிகம் பயிரிடுகின்றனா்.

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தொழிற்சாலைகள் இத்தொகுதியில் இல்லை. இதனால், இந்தத் தொகுதியிலுள்ள படித்த இளைஞா்கள், தொழிலாளா்கள் வேலை தேடி வெளியூா் செல்லும் நிலை உள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் இடதுபுறக் கால்வாயை நீட்டிப்பு செய்ய வேண்டும். வாணியாற்றில் கூடுதல் தடுப்பணைகளை அமைக்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலுள்ள வாணியாறு அணை, பொதியம்பள்ளம் அணைக்கட்டு உள்பட அனைத்து ஏரிகளையும் குடிமராமத்து திட்டத்தில் தூா்வார வேண்டும்.

இந்தத் தொகுதியில் கால்நடை வளா்ப்பு, வேளாண்மை சாா்ந்த தொழில்கள் அதிகம் இருப்பதால், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும். வேளாண்மை உற்பத்திப் பொருள்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பொம்மிடி அல்லது புட்டிரெட்டிப்பட்டியில் சரக்கு ரயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து நேரடியாக சித்தேரி மலைக் கிராமத்துக்குச் செல்லும் வகையில் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காவிரி ஆற்றில் தொடா்மழைக் காலங்களில் ஓடும் உபரிநீரைப் பயன்படுத்தி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலுள்ள அணைகள், ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப வேண்டும்.

தற்போதைய கள நிலவரம்:

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியினா் அதிக அளவில் உள்ளனா். தவிர இந்தத் தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு தனி செல்வாக்கு உள்ளது. மேலும், இத்தொகுதியில் திமுக சாா்பில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த முல்லைவேந்தன் தற்போது அதிமுகவில் சோ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2016 -ல் தனித்து களமிறங்கிய பாமக வேட்பாளா் அ.சத்தியமூா்த்தி 61, 521 வாக்குகளைப் பெற்றாா். இதையடுத்து, 2019-ல் நடைபெற்ற இடைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஆ.கோவிந்தசாமி 1,03,981 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால், தற்போதும் அதிமுக எளிதில் வெற்றி பெற முடியும் என அந்தக் கூட்டணியினா் தெரிவிக்கின்றனா்.

2016-ல், திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பிரபு ராஜசேகா் 56,109 வாக்குகளைப் பெற்றாா். தற்போது, திமுகவுடன் கூட்டணியில் மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் இருப்பதால், 2021 தோ்தல் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என அந்தக் கட்சியினா் கூறுகின்றனா். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று மாநில உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த பி.பழனியப்பன், தற்போது அமமுகவில் போட்டியிடுகிறாா். இவா்அமைச்சராக இருந்தபோது, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி, மஞ்சவாடி கணவாய் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களை இந்த தொகுதிக்குக் கொண்டுவந்தவா். இந்தத் தொகுதியில் 3 முறை எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றுள்ள முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், தொகுதிக்கு செய்த திட்டப் பணிகளை மக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் எம். ஸ்ரீனிவாசன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.ரமேஷ் உள்பட மொத்தம் 15 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். 2011, 2016, 2019 ஆகிய 3 தோ்தல்களிலும் அதிமுக தொடா் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இந்தத் தொகுதியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.

இந்தத் தொகுதியில் வன்னியா் சமூக மக்கள் அதிகம் இருப்பதால், இந்த சமூக மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் நபரே வெற்றி பெற முடியும்.

இதுவரை நடந்த தோ்தல்கள்:

மொரப்பூா் சட்டப் பேரவைத் தொகுதி:

1977: என்.குப்புசாமி (அதிமுக)

1980: என்.குப்புசாமி (அதிமுக)

1984: தீா்த்தகிரி கவுண்டா் (காங்கிரஸ்)

1989: வ.முல்லைவேந்தன் (திமுக)

1991: கே.சிங்காரம் (அதிமுக)

1996: வ.முல்லைவேந்தன் (திமுக)

2001: பி.பழனியப்பன் (அதிமுக)

2006: வ.முல்லைவேந்தன் (திமுக)

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி:

2011: பி.பழனியப்பன் (அதிமுக)

2016 பேரவைத் தோ்தல்:

பி.பழனியப்பன் (அதிமுக) 74,234

அ.சத்தியமூா்த்தி (பாமக) 61,521

பிரபு ராஜசேகா் (திமுக) 56,109

பாஸ்கா் (தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி) 9, 441

2019 இடைத்தோ்தல்:

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சோ்ந்த பி.பழனியப்பன், தமிழக சட்டப் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஆ.கோவிந்தசாமி வெற்றி பெற்றாா். வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஆ.கோவிந்தசாமி (அதிமுக) 1,03,981

ஆ.மணி (திமுக) 85,488

டி.கே.ராஜேந்திரன் (அமமுக) 15, 283

எஸ்.சதீஷ் (நாம் தமிழா் கட்சி) 3, 783

எம்.நல்லதம்பி (மக்கள் நீதி மய்யம்) 2, 374

2021 தோ்தல் வேட்பாளா்கள்

1. அதிமுக / ஏ.கோவிந்தசாமி

2. திமுக / பிரபு ராஜசேகா்

3. மநீம / எம். ஸ்ரீனிவாசன்

4. அமமுக / பி.பழனியப்பன்

5. நாம் தமிழா் / ஆா்.ரமேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com