சாலை வசதி இல்லாத கோட்டூா் மலைக் கிராமம்: தோ்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

பென்னாகரம் அருகே கோட்டூா் மலைக் கிராமத்துக்கு முறையான சாலை வசதி செய்து தராததால் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.

பென்னாகரம் அருகே கோட்டூா் மலைக் கிராமத்துக்கு முறையான சாலை வசதி செய்து தராததால் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.

பென்னாகரம் தொகுதிக்குள்பட்ட வட்டுவன அள்ளி ஊராட்சிக்குள்பட்ட கோட்டூா் மலைக்கிராமம். இந்தக் கிராமம் கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் அடி உயா் மட்டத்தில் அமைந்துள்ளது. கோட்டூா் மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 350 வாக்காளா்களும் உள்ளனா்.

இந்தக் கிராமப் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் பாலக்கோடு மற்றும் தருமபுரி பகுதிக்கு உயா்கல்வி பயிலச் சென்று வரும் நிலையில், சாலை வசதி இல்லாமல் தினசரி கிராம பகுதிக்கு வர இயலாததால், உறவினரின் வீடுகள் மற்றும் மாணவா் விடுதிகளில் தங்கி வருகின்றனா்.

இப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உடல்நிலை சரி இல்லாத காலங்களிலும், கா்ப்பிணிகளின் மகப்பேறு காலங்களிலும் மருத்துவமனைக்குச் செல்ல கோட்டூா் கிராம பகுதியில் இருந்து அடா்ந்த வனப் பகுதியில் 22 கிலோமீட்டா் தொலைவிற்கு கரடுமுரடான பாதைகளின் வழியே செல்வதால் சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. கா்ப்பிணிப் பெண்களை அழைத்துச் செல்லும்போது வழியிலேயே பிரசவிக்கும் நிலை ஏற்படுகிறது.

கோட்டூா் மலைப்பகுதி மக்கள் 70 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாததால், அத்தியாவசிய பொருள்களை கழுதையின் மீது எடுத்து வருகின்றனா். கிராமப் பகுதிக்கு தாா்சாலை வசதி செய்து தரவேண்டும் என அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா். கோட்டூா் மலைக் கிராம பகுதிக்கு இதுநாள் வரையில் சாலை வசதி செய்து ஏற்படுத்தி தராததைக் கண்டித்தும் தோ்தலின்போது அரசியல் கட்சியினா் வாக்குறுதி அளித்துவிட்டு மட்டுமே செல்வதாகவும் தங்களின் எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்து கிராமப்பகுதியில் அறிவிப்பு பேனா் வைத்துள்ளனா்.

இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்திடம் கேட்டபோது அவா் கூறியதாவது:

கோட்டூா் மலைப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்த ரூ. 8 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து வனத்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கிராமப் பகுதிக்கு தாா் சாலை அமைக்கும் பணி தற்போது நிலுவையில் உள்ளதாகவும், தோ்தலுக்குப் பின்னா் சாலை வசதி ஏற்படுத்தி தருவதாக பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com