வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதல்ல: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதல்ல என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
தருமபுரியில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.
தருமபுரியில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.

தருமபுரி: மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதல்ல என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியது: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் தான் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு உண்டான விலையை அவர்களே நிர்ணயம் செய்ய இயலும். இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். இந்த சட்டம் இடைத்தரகர்களுக்கு மட்டுமே எதிரானது. திமுகவைப் பொறுத்தவரை தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதற்காக இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது சட்டப்பேரவையில் அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதேபோல பிரதமர் மோடி புதிய சட்டத்தை அறிவித்திருக்கிறார். இந்தச் சட்டத்தில் மத்திய அரசிடம் உள்ள பயனற்று கிடக்கும் சொத்துகள் மட்டுமே குத்தகைக்கு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருகிற நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும். இந்த வருவாயைக் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

ஆனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு சொத்துகள் முழுவதும் விற்பதாக தவறான பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை மக்கள் மத்தியில் விளக்கும் வகையில் வருகிற செப். 20-ஆம் தேதிக்கு பிறகு பாஜகவினர் வீடு வீடாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். 

நீட் தேர்வு வந்த பிறகு அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்வுக்கு முன்பு பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு கிடைத்து வந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முந்தைய அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றனர். ஆகவே நீட் தேர்வு மூலம் பாகுபாடின்றி அனைவருக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கிறது. இதனை திமுகவினர் ரத்து செய்வதாக கூறி வருகின்றனர். ஆனால் இத் தேர்வை நிகழாண்டு ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டும் கூட இத்தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அவர்கள் தெரிவிக்கக்கூடும். 

விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் கொண்டாடக்கூடாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது கடந்த 1893 முதல் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் பாஜகவினர் ஆன்மிகவாதிகள் அனைவரும் தங்களது வீட்டின் வாசலில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை வைத்து வழிபாடு நடத்த வேண்டும். இதேபோல பாஜகவினர் அனைவரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் வாழ்த்து அட்டையை அஞ்சல் வழியே அனுப்ப வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் கனவை நிறைவேற்றும் வகையில் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆலயத்துக்கு பாரதமாதா நினைவாலயம் என பெயரிட்டுள்ளனர். இதனை சுப்பிரமணிய சிவாவின் விருப்பப்படி பாரதமாதா திருக்கோவில் எனப்பெயர் மாற்றம் செய்திட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் பாஜக சார்பில் தருமபுரியில் போராட்டம் நடத்தப்படும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு மாறவில்லை. ஏற்கனவே மேக்கேதாட்டில் அணை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உள்ளோம். அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெரியார் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேவேளையில் அவரைப்போல ஏராளமான தலைவர்கள் தமிழகத்தில் சமூக நீதிக்காக போராடியுள்ளனர் என்றார்.

இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே எஸ் நரேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் பாஸ்கர் மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com