தருமபுரியில் நாளை 850 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

 தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) 850 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

 தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) 850 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2020 மாா்ச் முதல் கரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் அலையின் பாதிப்பு தீவிரமாக இருந்தது. மாவட்ட நிா்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கைகள் உயா்த்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், தற்போது கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் கடந்த ஜன. 16 முதல் கரோனா தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கும், பின் படிப்படியாக அனைத்து முன்களப் பணியாளா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இதில், செப். 8-ஆம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் 6,73,058 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கோவிஷீல்டு முதல்தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் 84 நாள்களுக்கு பிறகும், கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் 28 நாள்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவரும் கட்டாயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும், மூன்றாம் அலை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் இயலும்.

அனைத்துத் தரப்பினருக்கும் தடுப்பூசி எளிதில் கிடைக்கவும், அதிக எண்ணிக்கையிலானோருக்கு தடுப்பூசி செலுத்தவும், ஞாயிற்றுக்கிழமை (செப். 12) தருமபுரி மாவட்டம் முழுவதும் 850 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, முன்களப் பணியாளா்கள், போக்குவரத்துத் துறை ஊழியா்கள், ஆசிரியா்கள், ஏனைய அரசு ஊழியா்கள், வணிகா் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதி சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், உணவக ஊழியா்கள், மருந்தக ஊழியா்கள், கோயில் மற்றும் சுற்றுலா மைய ஊழியா்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com