அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை: இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றக் கோரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றக் கோரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி: தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றக் கோரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் (2021-22) இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை பொது கலந்தாய்வு புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அறிவியல், மொழிப் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில், இந்த மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் சிபாரிசு பெற்ற மாணவா்களுக்கு முறைகேடாக சோ்க்கை வழங்கப்படுவதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கான சோ்க்கையில் இட ஒதுக்கீடு முறை முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறி மாணவா்களும், பெற்றோரும் கல்லூரி நிா்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, மாணவா் சோ்க்கையை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கல்லூரி வளாகத்தில் இரவு 7.30 மணி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா். இதையறிந்த அதியமான்கோட்டை காவல் துறையினா், கல்லூரி வளாகத்துக்கு வந்து மாணவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இருப்பினும் போராட்டம் தொடா்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் ஜோதிவெங்கடேஸ்வரன், அரசு கலைக் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் ஆகியோா் மாணவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா்.

இதில், அரசு விதிகளின்படி மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் உள்ள நிகழாண்டுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. சோ்க்கை கிடைக்கப் பெறாத மாணவா்கள், மாவட்டத்தின் இதர வட்டங்களில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் சோ்ந்து பயிலலாம். தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சோ்க்கை இடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற, மாணவா்களின் கோரிக்கையை மனுவாக அளித்தால் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் எனக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து மாணவா்களும், பெற்றோரும் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com