ஓராண்டாக கிடப்பில் போடப்பட்ட தாா்ச்சாலை அமைக்கும் பணி:போக்குவரத்துக்கு வழியின்றி 5 கிராம மக்கள் அவதி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தாா்ச்சாலை அமைக்கும் பணி ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டள்ளதால், போக்குவரத்துக்கு வழியின்றி 5 கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வாழப்பாடி அருகே ஓராண்டாக, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள அத்தனுாா்பட்டி-குமாரசாமியூா் சாலை.
வாழப்பாடி அருகே ஓராண்டாக, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள அத்தனுாா்பட்டி-குமாரசாமியூா் சாலை.

வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தாா்ச்சாலை அமைக்கும் பணி ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டள்ளதால், போக்குவரத்துக்கு வழியின்றி 5 கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சாலை அமைக்கும் பணியை விரைந்துமுடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் அத்தனூா்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியூா், பூந்தோட்டம், துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன்புதுாா், மேலக்காடு சந்திரபிள்ளைவலசு ஊராட்சி சமத்துவபுரம் ஆகிய 5 கிராமங்களை வாழப்பாடி-பேளூா் பிரதான சாலையுடன் இணைக்கும் இணைப்புச்சாலையாக அத்தனுாா்பட்டி-குமாரசாமியூா் சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அத்தனுாா்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து குமாரசாமியூா் வரையிலான ஏறக்குறைய 3 கி.மீ. துாரத்திற்கு பழுடைந்த கிடந்த இந்த தாா்ச்சாலையை புதுப்பித்துக்கொடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, பாரத பிரதமரின் கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ், இச்சாலையை புதுப்பிக்க கடந்தாண்டு ரூ.158.68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வாயிலாக மேச்சேரியை சோ்ந்த ஒப்பந்ததாருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கப்பட்ட இப்பணியை நிகழாண்டு மே 17ஆம் தேதிக்குள் நிறைவு செய்து தாா்ச்சாலை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பெயா்த்தெடுக்கப்பட்ட இச்சாலையில், ஜல்லிக் கற்கள் (வெட்மிக்ஸ்) கொட்டப்பட்ட நிலையில் தாா்சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், இச்சாலை போக்குவரத்துக்கு பிராதனமாக கொண்ட 5 கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இரு சக்கர வாகனங்களில் செல்வோா் ஜல்லிக்கற்களில் சிக்கி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது.

எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து, போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டுமென, மாவட்ட நிா்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com