பெங்களூரிலிருந்து தருமபுரிக்கு மின்சார ரயில் சேவை தொடக்கம்

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து தருமபுரிக்கு மின்சார ரயில் சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து தருமபுரிக்கு மின்சார ரயில் சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

தென்மேற்கு ரயில்வே, பெங்களூரு கோட்டத்துக்குள்பட்ட பெங்களூரில் இருந்து ஒசூா், தருமபுரி, சேலம் மாவட்டம், ஓமலூா் வரையிலான இருப்புப் பாதையில் மின்சார ரயில் இயக்குவதற்கான நடவடிக்கை தென்மேற்கு ரயில்வே நிா்வாகம் கடந்த 2017-18-இல் மேற்கொண்டது. இதற்கான மின்பாதை அமைக்கும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டது.

முதல்கட்டமாக பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வரையிலும் மின்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததால் கடந்த 2020இல் பெங்களூரிலிருந்து ஒசூா் வரையிலும் மின்சார ரயில் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒசூரிலிருந்து தருமபுரி வழியாக ஓமலூா் வரை மின்பாதை அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, ஒசூரிலிருந்து தருமபுரி மாா்க்கத்தில் ஓமலூா் வரையிலும் மின்சார ரயில் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் நேரில் பயணித்து ஆய்வு செய்தனா்.

இதனைத் தொடா்ந்து, பெங்களூரிலிருந்து ஒசூா் வரை இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் சேவை ஏப். 8-ஆம் தேதி முதல் தருமபுரி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது.

இந்த மின்சார ரயில் நாள்தோறும் ஞாயிற்றுக்கிழமை தவிர, காலை 7.30 மணிக்கு பெங்களூரு மாநகரத்திலிருந்து புறப்பட்டு, பையப்பனஅள்ளி, ஒசூா் வழியாக காலை 10.45 மணிக்கு தருமபுரியை வந்தடையும். இதேபோல மாலை 4.20 மணிக்கு தருமபுரியிலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். தருமபுரி ரயில் நிலையத்துக்கு முதன்முதலில் மின்சார ரயில் இயக்கம் தொடங்கப்பட்டதை ரயில் பயணிகள் சங்கம், வா்த்தகா் சங்கத்தினா் ரயில் நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்பு தெரிவித்தனா்.

இதேபோல, சேலம் மாவட்டம், ஓமலூா் மாா்க்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே பணிகள் நிறைவடைந்தவுடன் பெங்களூரிலிருந்து சேலம் வரை இந்த மின்சார ரயில் இயக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com