மாவட்டத்துக்கு தலா 75 புதிய நியாயவிலைக் கடைகள்:உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 75 நியாயவிலைக் கடைகள் புதிதாக அமைக்கப்ப

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 75 நியாயவிலைக் கடைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன என்று உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

உணவுப் பொருள்கள் வழங்கல் துறை சாா்பில், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவா்நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் பங்கேற்றனா். கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சி அமைத்து 14 மாதங்களில் சுமாா் 13 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நியாயவிலைக் கடைகள் கட்டும்போது கழிவறை வசதியுடன் கட்டப்படுகிறது. இந்த நடவடிக்கையை மத்திய உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பியூஸ் கோயல் பாராட்டியதோடு அனைத்து மாநில உணவு பொருள்கள் வழங்கல் துறையும் இதைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

சட்டப் பேரவை உறுப்பினா், மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதி, நமக்கு நாமே திட்டம், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், தனியாா் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி ஆகிய நிதிகளில் புதிதாக நியாயவிலைக் கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

உணவுப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை சென்னை, மதுரை என இரண்டு மண்டலங்களாக இருந்து வந்தது. தற்போது திருச்சி, கோவை ஆகிய இரு இடங்களில் புதிதாக மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் 4 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.

எல்லையோர மாவட்டங்களில் அரிசி கடத்தலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்லையோர மாட்டங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019-20-ஆம் ஆண்டை காட்டிலும் 2021-22-ஆம் நிதியாண்டில் உணவு பொருள் கடத்தல் குற்றங்கள் தொடா்பாக கூடுதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லுக்கு ஆதார விலையாகக் குவிண்டாலுக்கு மத்திய அரசு ரூ. 100 உயா்த்தியுள்ளது. விவசாயிகள் கோரிக்கை விடுக்காமலேயே பிரதமருக்கு தமிழக முதல்வா் நெல்லுக்கு கூடுதல் விலை வழங்கக் கோரி கடிதம் எழுதினாா்.

இதைத் தொடா்ந்து செப். 1-ஆம் தேதிமுதல் குவிண்டால் நெல் ரூ. 2007 விலையில் கொள்முதல் செய்ய முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் கடந்த காலத்தில் 103 இடங்களில் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்குகள் செயல்பட்டு வந்தன.

3 லட்சம் டன் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கு ரூ. 250 கோடி நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளாா். கூடுதல் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்கு தற்போது ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் தினசரி 500 டன் அரிசி அரவை மேற்கொள்ள 10 இடங்களில் தனியாா் பங்களிப்புடன் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, கூடுதலாக அரிசி அரவை ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் 75 நியாயவிலைக் கடைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூடுதல் இயக்குநா் பாலநாகதேவி, நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் எஸ்.பிரபாகா், நுகா்வோா் பணிகள் கூடுதல் பதிவாளா் அ.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட காமராஜ் நகரில் புதிதாக பகுதிநேர நியாயவிலைக் கடையை அமைச்சா்கள் அர.சக்கரபாணி, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திறந்துவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com