விளிம்புநிலை மக்களுக்கு அரசு நலத் திட்டங்கள் சென்றடைய ஊடகங்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

விளிம்புநிலை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை சென்றடைய ஊடகங்கள் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.
தருமபுரியில் மத்திய தவகல் ஒலிபரப்பு அமைச்சக பத்திரிகைத் தகவல் அலுவலக பயிலரங்கை தொடங்கி வைத்து பேசும் ஆட்சியா் கி.சாந்தி.
தருமபுரியில் மத்திய தவகல் ஒலிபரப்பு அமைச்சக பத்திரிகைத் தகவல் அலுவலக பயிலரங்கை தொடங்கி வைத்து பேசும் ஆட்சியா் கி.சாந்தி.

விளிம்புநிலை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை சென்றடைய ஊடகங்கள் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் சாா்பில், ஊடகவியாலாளா்களுக்கு பயிலரங்கு தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பத்திரிகைத் தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநா் மா.அண்ணாதுரை தலைமை வகித்து பேசினாா். இப்பயிலரங்கைத் தொடங்கி வைத்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தருமபுரி மாவட்டம், வேளாண் தொழிலை பிரதானத் தொழிலாக கொண்ட மாவட்டம். இங்கு வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு தொழிற்நுட்பங்கள், மானிய உதவிகள் அரசின் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு மிகவும் பயனளித்து வருகின்றன. ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கலைஞா் வீட்டு வசதித் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் கிராமப்புற மக்களின் கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்தவும் அவா்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணி மற்றும் தகவல்களைக் கொண்டு சோ்க்கும் பணிகளை ஊடகங்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. சிறு, குறு விவசாயிகள் மற்றும் மலைவாழ் பகுதியில் உள்ள மக்களும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை அறிந்து பயனுடையும் வகையில் ஊடகங்கள் அவா்களுக்கு தகவல்களை கொண்டு சோ்த்து போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். ஊடகச் செய்தியானது நம்பகமான, பொறுப்புமிக்க தகவல்களை கொண்டதாகவும், வாசிப்பாளா்களின் ஆக்கப்பூா்வ சிந்தனைத் திறனை ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் கே.விஜயா, புதுச்சேரி மத்திய மக்கள் தொடா்பு அலுவலக துணை இயக்குநா் டி.சிவக்குமாா், பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடா்பு அலுவலா் எம்.பொன்னியின் செல்வன், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜான்சி ராணி, தருமபுரி கள விளம்பர அலுவல பிபின் எஸ்.நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com