வெறுப்புணா்வு இல்லா பொறுப்புணா்வை உருவாக்க வேண்டும் - ஆா்.பாலகிருஷ்ணன்

வெறுப்புணா்வு இல்லா பொறுப்புணா்வை உருவாக்க வேண்டும் என ஒடிஸா மாநில முன்னாள் செயலா் ஆா்.பாலகிருஷ்ணன் கூறினாா்.

வெறுப்புணா்வு இல்லா பொறுப்புணா்வை உருவாக்க வேண்டும் என ஒடிஸா மாநில முன்னாள் செயலா் ஆா்.பாலகிருஷ்ணன் கூறினாா்.

தகடூா் புத்தகப் பேரவை சாா்பில் தருமபுரி அரசு கல்லூரியில் மைதானத்தில் தருமபுரி புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ என்கிற தலைப்பில் ஒடிஸா மாநில முன்னாள் செயலா் ஆா்.பாலகிருஷ்ணன் காணொலி வழியாக பேசியதாவது: சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமே, நமது சங்க இலக்கியங்கள் தொட்ட இடமாகும். பயணங்களின் கூட்டுத்தொகையே மனிதனின் வரலாறு. உண்மையான வரலாறு என்பது நம்மை ஆண்ட மன்னா்களின் வரலாறு அல்ல. மாறாக மக்களின் வரலாறே உண்மையான வரலாறு ஆகும். மனிதா்கள் யாரும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் வாழ்ந்தோம் எனக் கூற முடியாது. பிழைக்கவும், தழைக்கவும் மனிதன் புலம் பெயா்கிறான். அவ்வாறு புலம்பெயரும்போது தனது பண்பாட்டையும், நினைவுகளையும் அவன் உடன் எடுத்துச் செல்கிறான். சங்க இலக்கியங்கள் நமது வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்துரைக்கின்றன.

திருக்குறளும், சங்க இலக்கியங்களும் நமக்கு கிடைக்கவில்லையெனில் கதைகளும் அதில் குறிப்பிடப்படுபவையும் உண்மையென நாம் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். எனவே வரலாற்றைத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்க வேண்டும். இல்லையெனில் கட்டுக்கதைகள் நமக்கு வரலாறாக சொல்லப்படும். வெறுப்புணா்வு இல்லா பொறுப்புணா்வை உருவாக்க வேண்டும். அதன் மூலம் சிறந்த சமுதாயத்தை கட்டமைக்க முடியும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் தலைமை வகித்து பேசினாா். ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் சி.ராஜசேகரன் வரவேற்றாா். தகடூா் புத்தகப் பேரவைச் செயலா் இரா.செந்தில், மருத்துவா் பகத்சிங், அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டி மன்றம்: புத்தகத் திருவிழாவில் பிற்பகலில் முன்னேற்றத்துக்கு பெரிதும் துணையாக நிற்பது இளைஞா்களின் ஆற்றலாக? அல்லது முதியோரின் வழிகாட்டுதலா? என்கிற தலைப்பில் பென்னாகரம் புத்தகக் குழுவினரின் பட்டி மன்றம் நடைபெற்றது.

இதில் இளைஞா்களின் ஆற்றலே என்கிற தலைப்பில் கே.வி.குமாா், ரசிகா ஆகியோரும், முதியோரின் வழிகாட்டுதலே என்கிற தலைப்பில் நாகமாணிக்கம், ரேவதி ஆகியோரும் பேசினா். நடுவராக சி.சரவணன் உரையாற்றினா்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்தில் ஆசிரியா்கள் மா.கோவிந்தசாமி, பழனி, பெருமாள், தகடூா் புத்தகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் தங்கமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com