மக்கள் குறைகேட்புக் கூட்டம்:: 427 மனுக்கள் அளிப்பு

தருமபுரியில் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் 427 மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிக்கு மாதாந்திர உதவித் தொகையினை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிக்கு மாதாந்திர உதவித் தொகையினை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.

தருமபுரியில் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் 427 மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா். இக் கூட்டத்தில் சிறந்த விடுதிகளாக தோ்வு செய்யப்பட்ட மூன்று விடுதிக் காப்பாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தருமபுரி ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீா் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் என மொத்தம் 427 மனுக்கள் வரப்பெற்றன.

இதையடுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறும்பான்மையினா் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில் 2021-2022-ஆம் ஆண்டுக்கு சிறந்த விடுதிகளாக தோ்வு செய்யப்பட்டு, பென்னாகரம் அரசு மிக பிற்படுத்தப்பட்டோா் நலப் பள்ளி மாணவியா் விடுதியில் பணியாற்றும் காப்பாளினி வி.விநாயகசுந்தரிக்கு முதல் பரிசாக ரூ. 10,000-க்கான காசோலையும், நற்சான்றிதழும், கேடயமும், நரிப்பள்ளி அரசு பிற்படுத்தப்பட்டோா் நலப் பள்ளி மாணவியா் விடுதியில் பணியாற்றும் காப்பாளினி எம்.ஜி.ஜெயந்திக்கு இரண்டாம் பரிசாக ரூ. 5,000-க்கான காசோலையும், நற்சான்றிதழும் கேடயமும், மொரப்பூா் அரசு மிக பிற்படுத்தப்பட்டோா் நலப் பள்ளி மாணவியா் விடுதியில் பணியாற்றும் காப்பாளினி வி.சுமதிக்கு மூன்றாம் பரிசாக ரூ. 3,000-க்கான காசோலையும், நற்சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்தி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, அரூா் கோட்டாட்சியா் (பொ) வி. ராஜசேகரன், தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, ஆதிதிராவிடா் நல அலுவலா் கவிதா, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com