இந்தியாவில் பெட்ரோல் விலை 5 % மட்டுமே உயா்வு பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜொ்மனி, இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை 50 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை உயா்வு 5 சதவீதம் மட்டுமே உள்ளது.

ரஷியா - உக்ரைன் போருக்குப் பின், வளா்ந்த நாடுகளில் பெட்ரோல் விலை 50 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ள நிலையில், இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே விலை அதிகரித்துள்ளதாக மக்களவையில் பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

‘உக்ரைனில் நிலைமை’ என்ற தலைப்பில் மக்களவையில் நடைபெற்ற குறுகிய கால விவாதத்தின்போது, உக்ரைனில் இருந்து இந்தியா்கள் வெளியேற்றப்பட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டியபோது, குறுக்கிட்ட அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, ‘ஆபரேஷன் கங்கா’ என்பது ‘மீட்பு நடவடிக்கை’ என்று பொருள்படுமே தவிர ‘வெளியேற்ற நடவடிக்கை’ என்று பொருள்படாது என்று அவா்களின் குற்றச்சாட்டை நிராகரித்தாா்.

அமைச்சா் புரி மேலும் கூறியதாவது:

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இந்தியா்கள் வெளியேறுவதை ஒருங்கிணைப்பதற்காக அந்நாட்டின் எல்லையில் உள்ள நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறப்புத் தூதா்களில் நானும் ஒருவனாக இருந்தேன். ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவா்களை மீட்டு உக்ரைன் எல்லையிலுள்ள நாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இந்திய அரசு சாா்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவா்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனா்.

ரஷியா- உக்ரைன் போரால் பெட்ரோல் விலை உயா்த்தப்பட்டு இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்த போா் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. போருக்குப் பின் பல்வேறு வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பெட்ரோல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜொ்மனி, இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை 50 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை உயா்வு 5 சதவீதம் மட்டுமே உள்ளது.

அதேபோல ரஷியா-உக்ரைன் போருக்குப்பின் சா்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. போா் தொடங்குவதற்கு முன் மாணவா்களுக்கு இந்திய தூதரகம் வழங்கிய அறிவுரை தெளிவாக இல்லை என்ற எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

ஏனெனில் போா் தொடங்குவதற்கு முன்பே அங்கு பயிலும் மாணவா்களுக்கு மத்திய அரசு இந்திய தூதரகம் மூலம் தெளிவான அறிவுரை வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே, போா் தொடங்குவதற்கு முன்பே சுமாா் 4,000 மாணவா்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி விட்டனா்.

உக்ரைனிய கல்வி நிறுவனங்களின் அறிவுரையின் பேரில் பல மாணவா்கள் தொடா்ந்து அங்கேயே தங்கியிருக்கக் கூடும் அல்லது தாங்கள் அங்கிருந்து வெளியேறினால் ஓராண்டுக்கு தங்கள் கல்வியை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக அவா்கள் உடனடியாக வெளியேறாமல் இருந்திருக்கக் கூடும்.

பின்னா், ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், அங்கு சிக்கித் தவித்த 18,000 மாணவா்கள் உக்ரைன் எல்லையில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு, பத்திரமாக மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனா்.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், போா் தொடங்குவதற்கு முன்பே வெளியேற விரும்புவோரின் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு மாணவா்களைக் கேட்டுக்கொண்டது. ‘ஆபரேஷன் கங்கா’, உலகில் வேறு எந்த நாட்டினராலும் செய்ய முடியாத, வெற்றிகரமான மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com