ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் ஒகேனக்கல் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

பென்னாகரம்: இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலுமாக குறைந்து, காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் ஒகேனக்கல் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், கேரட்டி, கெம்பா கரை, ராசி மணல் உள்ளிட்ட பகுதிகள் , கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளான தெப்பக்குளி மற்றும் காவிரி கரையோரத்தை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து உயர்ந்து நொடிக்கு 12 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்து தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது. காவிரி ஆற்றில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதித்திருந்தார். 

இந்தத் தடை இரண்டு நாள்களாக நீட்டிக்கப்பட்ட வந்த நிலையில், இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலுமாக குறைந்து உள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

இந்த நிலையில் திங்கள்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகள் எண்ணெய் தேய்த்து, அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர். மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால்,  மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com