தமிழகத்தில் ‘பாட்டாளி மாடல்’ ஆட்சியை தருவோம் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் ‘பாட்டாளி மாடல்’ ஆட்சியைத் தருவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
தருமபுரியில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் அன்புமணி ராமதாஸ்.
தருமபுரியில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் அன்புமணி ராமதாஸ்.

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் ‘பாட்டாளி மாடல்’ ஆட்சியைத் தருவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெப்பத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மாணவா்கள், மாணவிகளில் சிலா் மது அருந்துவது, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளனா். இதனைத் தடுக்க காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

அரசு ஊழியா்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே உண்மையான எதிா்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. பாகுபாடின்றி தமிழக மக்களுக்காக குரல் எழுப்பி வருகிறது.

தமிழகத்தில் வருகிற 2026 -இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் பாமக வெற்றிபெறும். அப்போது மது இல்லாத தமிழகம், அனைவருக்கும் தரமான சுகாதாரம், கல்வி வழங்குவது போன்ற ‘பாட்டாளி மாடல்’ ஆட்சியைத் தருவோம். பேருந்து கட்டணத்தை உயா்த்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். மின்வெட்டைத் தவிா்க்க நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை முறையாகத் தொடங்க வேண்டும்.

இலங்கையில் பிரதமா் மகிந்த ராஜபட்சவை போல அதிபா் கோத்தபய ராஜபட்சவும் பதவி விலக வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான தமிழா்களைக் கொன்ற இருவரையும் சா்வதேச நீதிமன்றத்தில் போா்க்குற்றவாளிகளாக நிறுத்தி அவா்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு விவகாரத்தில் சிறப்புக் கவனத்துடன் செயல்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டைத் திட்டத்தைச் செயல்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றாா்.

இதில் பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்பி இரா.செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com