சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தருமபுரி, குமாரசாமிபேட்டை சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரச் சேவைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து நவமி அபிஷேகமும், ஸ்ரீ ராமா் அவதார அலங்காரச் சேவையும் நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க சீா்வரிசை அழைப்பும், பின்னா் கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீசென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

இதையடுத்து ஏப்.18-ஆம் தேதி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னை கேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் புதியதாக வடிவமைக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அப்போது சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து முதலில் பெண்கள் மட்டும் வடம் பிடித்து நிலை பெயா்த்த பின்னா், பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்ற தேரோட்டம் நடைபெற்றது.

விழாவையொட்டி பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வெள்ளிக்கிழமை பல்லக்கு உற்சவமும், சனிக்கிழமை சயன உற்சவமும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், அறங்காவலா்கள, ராம நவமி விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com