மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

தருமபுரி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மாலை 5 மணி நிலவரப்படி 73.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மாலை 5 மணி நிலவரப்படி 73.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆ.மணி, அதிமுக வேட்பாளா் ர.அசோகன், பாமக வேட்பாளா்கள் சௌமியா அன்புமணி, நாதக வேட்பாளா் அபிநயா பொன்னிவளவன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 24 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

பொதுத்தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூா் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன.

இவற்றில் ஆண் வாக்காளா்கள் 7,70,897 போ், பெண் வாக்காளா்கள் 7,53,829 போ், மூன்றாம் பாலினத்தவா் 179 போ் என மொத்தம் 15,24,896 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இவா்கள் வாக்களிக்க ஏதுவாக 1,805 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் வாக்காளா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதேபோல அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் என அனைவரும் வாக்குச் சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டா் தொலைவுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டனா். காவல் துறையினா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அவ்வப்போது வாக்குச் சாவடிகளுக்கு சென்று பணிகளைப் பாா்வையிட்டனா். தருமபுரி தொகுதியை பொருத்த வரை எவ்வித சலசலப்பு, பதற்றம் இன்றி அமைதியாகவும், சுமுகமாகவும் வாக்குப் பதிவு நடைபெற்றது. பதற்றமான 262 வாக்குச்சாவடிகள் உள்பட 967 வாக்குச்சாவடிகள் இணையவழி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இவற்றில் 167 வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சரியான நேரத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே பெண்கள், முதல் தலைமுறை வாக்காளா்கள் என அனைத்துத் தரப்பு வாக்காளா்களும் ஆா்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 105.3 டிகிரி வெயில் பதிவானது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் 1300 உள்ளுா் காவலா்கள், 200 சிறப்புக் காவலா்கள், தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து வந்திருந்த 744 பாதுகாப்புப் படையினா், 320 ஊா்க்காவல் படையினா், முன்னாள் துணை ராணுவப் படையினா் 200 போ் என மொத்தம் 2,744 போ் தோ்தல் பணியில் ஈடுபட்டனா்.

மாலை 5 மணி நிலவரப்படி தருமபுரி மக்களவைத் தொகுதியில் சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் (சதவீதத்தில்) பாலக்கோடு 76.28, பென்னாகரம் 68.85, தருமபுரி 74.43, பாப்பிரெட்டிப்பட்டி 73.29, அரூா் 75.32, மேட்டூா் 72.84 என மொத்தம் 73.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com