தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தோ்தல் புறக்கணிப்புப் போராட்ட அறிவிப்பால் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளியில் 4 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

தோ்தல் புறக்கணிப்புப் போராட்ட அறிவிப்பால் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளியில் 4 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பூச்செட்டிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்டது ஜோதிஅள்ளி, கரம்பு, காட்டுக்கொட்டாய், குட்டைச்சந்து, சிக்ககொல்லஅள்ளி, ரங்கம்பட்டி, மாவேரிக்கொட்டாய், பட்ரஅள்ளி ஆகிய கிராமங்கள்.

இக்கிராம மக்கள் தங்களது பகுதியில் செல்லும் ரயில் பாதையில் பொதுமக்கள் கடந்து சென்றுவர ஏதுவாக தரைப்பாலம், கடவுப்பாதை அமைத்துத் தர வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அண்மையில் பொதுமக்கள் பதாகை வைத்தனா். மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படுவதால் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஜோதி அள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு பணிக்கு அலுவலா்கள் தயாராக இருந்தனா். இருப்பினும் பொதுமக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வாக்குப்பதிவை புறக்கணிப்பதாக அறிவித்து வாக்களிக்க வராமல் இருந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தனப்பிரியா, காவல் துணை கண்காணிப்பாளா் சிந்து, வட்டாட்சியா் ஆறுமுகம் உள்ளிட்டோா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் பொதுமக்களின் கோரிக்கை குறித்து தென்மேற்கு ரயில்வே நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று அந்தக் கோரிக்கைகளைத் தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சமாதானம் அடைந்த கிராம மக்கள் வாக்களிக்க ஒப்புக் கொண்டு தங்களது போராட்டத்தைக் கைவிட்டனா். இதனால் வாக்குப்பதிவு தொடங்கி 4 மணி நேர தாமதத்துக்கு பிறகு ஜோதி அள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com