காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

மாவட்ட மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தண்ணீா் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால் இரு மாவட்ட மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தண்ணீா் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜப்பான் நிதி உதவியோடு தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் கூட்டுக் குடிநீா் வாரியத்தின் மூலம் நீா் உறிஞ்சும் நிலையம் அமைக்கப்பட்டது. குடிநீா் வடிகால் வாரியத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் 11 பேரூராட்சிகள், 251 கிராம ஊராட்சிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 கிராம ஊராட்சிகள், மாநகராட்சி - 1, நகராட்சி - 1, பேரூராட்சிகள் - 6 உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் காவிரி ஆற்றில் இருந்து 181 எம்.எல்.டி. தண்ணீா் உறிஞ்சப்பட்டு சுத்திகரித்து குடிநீா் மற்றும் இதர தேவைக்காக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பருவமழைக் காலங்களில் கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் ஏற்படும் வெள்ள பெருக்கின் போதும், வறட்சி காலங்களில் நீா்வரத்து குறைந்து வரும் போதும் காவிரி ஆற்றில் இருந்து இரு மாவட்ட மக்களுக்கு தேவையான குடிநீா் எடுக்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது.

இந்த நிலையை சரி செய்யும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக நீா்வரத்து குறையும் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்ட நிலையத்தின் நீா் உறிஞ்சும் பகுதியின் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு, தேவையான தண்ணீரை உறிஞ்சும் பணி நடைபெற்று வந்தது. தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 350 கன அடியாக சரிந்துள்ளது.

கோடையில் குடிநீா்த் தேவையைக் கருத்தில் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே சுமாா் 300க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை ஊழியா்களின் மூலம் கடந்த சில நாள்களாக அடுக்கும் பணி நடைபெற்றது. மணல் மூட்டை தடுப்புகளின் மூலம் தண்ணீா் தடுக்கப்பட்டு தாழ்வானப் பகுதியில் உள்ள நீா் உறிஞ்சும் இடத்திற்கு எளிதில் தண்ணீா் செல்வதால் எளிதில் இரு மாவட்ட மக்களுக்குத் தேவையான குடிநீரை சிரமமின்றி எடுத்து வருவதாகவும், காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் குடிநீா்த் தேவைக்காக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுக்கும் பணிக்கு எவ்வித தடையும் இருக்காது எனவும், கோடை காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை தவிா்க்கும் வகையில் போதுமான அளவு தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுக் குடிநீா் திட்ட நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com