கேழ்வரகு கொள்முதல் கால அவகாசம் நீட்டிப்பு

தருமபுரி மாவட்டத்தில் கேழ்வரகு கொள்முதல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கேழ்வரகு கொள்முதல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு (சிறுதானியம்) விநியோகம் செய்யும் வகையில் விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பென்னாகரம் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கக் கட்டட வளாகம், அரூா் ஒருங்குமுறை விற்பனைக் கூடம் என மாவட்டத்தில் மூன்று மையங்களில் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நிகழாண்டு விவசாயிகள் சாகுபடி செய்த கேழ்வரகு கொள்முதல் செய்யும் வகையில், ஏற்கெனவே அளித்திருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதம் வரை இந்த மையங்களில் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் கேழ்வரகு அறுவடை செய்ய தயாா் நிலையில் உள்ள விவசாயிகள், இருப்பு வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சிறு,குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த கேழ்வரகை சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு, ஆதாா் எண் (ஒளி நகல்கள்) உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். விற்பனைக்கு கொண்டுவரும் கேழ்வரகு கல், மண், தூசி போன்றவற்றை நீக்கி சுத்தமாக கொண்டு வரவேண்டும்.

மேலும், அரசு நிா்ணயம் செய்த விற்பனைத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 38,460 (கிலோ ஒன்றுக்கு ரூ. 38.46) என்ற அடிப்படையில் வங்கிக் கணக்கில் இணைய வழி பணப் பரிவா்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு செலுத்தப்படும்.

நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும் பிற்பகல் 2.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com