தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, ஏப். 30: தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் எம்.குமாா் தலைமையில் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளா் கே.பி.பெருமாள் பேசினாா். மாவட்டச் செயலாளா் சோ.அருச்சுணன் அறிக்கை சமா்ப்பித்து பேசினாா்.

இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயில் நிகழாண்டு அதிக அளவில் உள்ளதால், வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 80 சதவீத நீா்நிலைகள் வடுவிட்டன. மீதமுள்ளவற்றிலும் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே நீா் இருப்பு உள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்த வேளாண் பயிா்கள் கருகிவிட்டன. மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீா் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய கவனம் செலுத்தி, தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு முழு மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும். மலைப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இக்கால்நடைகளைப் பாதுகாக்க நடமாடும் மருத்துவக் குழுவை அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், விவசாயிகள் இயக்க மூத்த தலைவா் பி.இளம்பரிதி, மாவட்ட துணைத் தலைவா்கள் கே.என்.மல்லையன், எஸ்.தீா்த்தகிரி, மாவட்ட துணைச் செயலாளா்கள் ஆ.ஜீவானந்தம், பி.சக்கரவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com