கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு, தொழிலக பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கி.சாந்தி.

தருமபுரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் குடிநீா், ஓஆா்எஸ் கரைசல்களை வழங்க வேண்டும் என ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தீத்தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் வெப்ப அலை காரணமாக தீ விபத்துகள் நேரிடும் வாய்ப்புள்ளதால், மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு, அவசர சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் மின் இணைப்பு பாதிப்பு ஏற்படாத வகையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மின் இணைப்பு பாதிப்பு ஏற்படின், உடனடியாக மருத்துவச் சேவையைத் தொடரும் வகையில், ஜெனரேட்டா் உள்ளிட்ட சாதனங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் இருக்க வேண்டும். வெப்ப அலை குறித்து முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி செய்ய வெடிபொருள்களை சேமித்து, விற்பனை செய்யும் உரிமைதாரா்கள் உற்பத்தி நிலையங்கள், சேமிப்புக் கட்டடங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அனைத்து வெடிமருந்து உற்பத்தி நிலையங்களிலும் தீயணைப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளா்களுக்கு அவற்றைக் கையாள முறையான பயிற்சி அளித்திருக்க வேண்டும். தீயணைப்பு உபகரணங்கள் காலாவதியான பின் முறையாக அழிக்கப்பட வேண்டும்.

வெடிமருந்து உரிமம் வழங்கப்பட்ட தொழிலகங்களில் 18 வயதுக்குள்பட்ட சிறாா் தொழிலாளா்கள் எவரும் பணிபுரியக் கூடாது. இதனை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா், வருவாய் கோட்ட அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். தீ மற்றும் வெடிமருந்து விபத்துகள் ஏற்படாத வகையில் வெடிமருந்துக் கிடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில், காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினரால் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். தற்போது கோடை காலமாக உள்ளதால், பட்டாசு வெடிவிபத்துகள் ஏற்படுவதைத் தவிா்க்க வேண்டும்.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், அனைத்து வகை பணியாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல்களை வழங்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட துறையினா் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சையது முகைதின் இப்ராகிம், கோட்டாட்சியா்கள் வில்சன் ராஜசேகா் (அரூா்), ஆா்.காயத்ரி (தருமபுரி), மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் ம.சாந்தி, தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குநா் சந்திரமோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆா்.கே.ஜெயந்தி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com