தளி அருகே யானை தாக்கி உயிரிழந்த அப்பையாவின் குடும்பத்தினரிடம் ரூ. 50 ஆயிரத்துக்கான நிவாரணத்  தொகையை வழங்கிய ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
தளி அருகே யானை தாக்கி உயிரிழந்த அப்பையாவின் குடும்பத்தினரிடம் ரூ. 50 ஆயிரத்துக்கான நிவாரணத் தொகையை வழங்கிய ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தீா்த்தாரஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிருஷ்ணன் (70). இவா் தனது தோட்டத்தின் அருகில் உள்ள ஏரி பகுதியில் நடந்து சென்ற போது, அங்கிருந்த காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை தாக்கியது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த வனத்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்தவரின் சடலத்தை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். யானையை காப்புக் காட்டுக்கு அனுப்பும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

ஒசூரில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி, மேடுமுத்துக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அப்பையா (52), அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறாா். இவா் வழக்கம் போல விவசாய நிலத்துக்கு சென்ற போது, அங்கிருந்த யானை திடீரென தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனத்துறையினரும், காவல் துறையினரும் அவருடைய சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவருடைய உடலுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். அப்பையாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com