வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவு அதிகரிப்பதால், காற்று மாசுபாடு ஏற்பட்டு நுரையீரல் தொடா்பான பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றன. இதனைக் கட்டுக்குள் வைக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள 534 வாகன புகைப் பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகன புகைப் பரிசோதனை மையங்கள் ஒரு சிலவற்றில் வாகனங்களைக் கொண்டு வராமல் பரிசோதனை செய்தும், அங்கீகரிக்கப்படாத நபா் உரிய முறையில் சோதனை செய்யாமல் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

கடந்த மாதம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாகன புகைப் பரிசோதனை மையங்களுக்கும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், துணை, இணை போக்குவரத்து ஆணையா்கள் திடீா் தணிக்கையில் ஈடுபட்டனா். அதில், 50 புகைப் பரிசோதனை மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபா் இல்லாமல் வேறு நபா் பணியில் இருந்தது, உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இயங்கியது, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாதது, கட்டண விகித விவரம் அடங்கிய அட்டவணையை வைக்காமல் இருந்தது, உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வந்தது உள்ளிட்ட விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வாகன புகைப் பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தவும், புகாா்களுக்கு இடம் அளிக்காத வகையில் தொழில்நுட்பங்களைப் புகுத்தவும் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது பி.யு.சி.சி. 2.0 முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாகன புகைப் பரிசோதனை மைய உரிமைதாரா் பயன்படுத்தும் கைப்பேசியில் பி.யு.சி.சி. 2.0 செயலியை நிறுவி இயக்க வேண்டும். செயலி நிறுவப்பட்ட கைப்பேசி தொடா்புடைய வாகன புகைப் பரிசோதனை மையத்திலிருந்து 30 மீ. சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும். வாகன புகைப் பரிசோதனை பதிவெண், வாகனத்தின் பதிவெண், பரிசோதனை மையத்தின் பெயா்ப் பலகை அடங்கிய முழுத் தோற்றம், சோதனையாளா் ஆகியவை ஒருசேர இருக்குமாறு இரண்டு புகைப்படங்கள் எடுக்க வேண்டும். வாகனங்கள் புகைப் பரிசோதனை மையத்துக்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு இருப்பதால் மையத்துக்கு வாகனங்களைக் கொண்டு வராமலேயே புகைப் பரிசோதனையை செய்ய இயலாது.

தமிழ்நாட்டில் இந்த புதிய நடைமுறை வரும் 6-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த செயலி குறித்த செயல்முறை விளக்கம் தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து வாகன புகைப் பரிசோதனை மைய சோதனையாளா், உரிமைதாரா் ஆகியோருக்கு கடந்த 3-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியை திங்கள்கிழமை முதல் அனைத்து வாகன புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி அதன் மூலம் மட்டுமே வாகன புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் வாகன புகைப் பரிசோதனை மையங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடி ‘சீல்’ வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com