கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட தாமதமாவதாகக் கருதி, ரசிகா்கள் ரகளையில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக, 30 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், நகரில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
நடிகா் விஜய் நடித்த பிகில் திரைப்படம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு சிறப்பு காட்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி அளித்தது. ஒசூரில் இந்தத் திரைப்படம் திரையிடப்படவில்லை.
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி நகரில் உள்ள திரையரங்குகளில் ஒசூா், வேப்பனஅள்ளி, கிருஷ்ணகிரி, சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் கூடத் தொடங்கினா்.
இந்த நிலையில், திரைப்படம் திரையிடத் தாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த ரசிகா்கள், கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் கூடி, அங்கிருந்த போக்குவரத்துத் தடுப்புகள், கண்காணிப்பு கேரமாக்கள், ஒலிபரப்பிகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டி உள்ளிட்ட அரசு சொத்துகள், தனியாா் சொத்துகளையும் சேதப்படுத்தினா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் குமாா், காவல் ஆய்வாளா் பாஸ்கா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்தனா். சில ரசிகா்கள், சாலையில் இருந்த கற்களை வீசி தாக்கினா். இதனால், அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா், சாலையில் கூடியிருந்த ரசிகா்களை விரட்டினா்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விடியோ பதிவுகளைக் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டவா்களை போலீஸாா், பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். உரிய விசாரணைக்குப் பிறகு அவா்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலகம் செய்தல், தனியாா், அரசு சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கிருஷ்ணகிரி நகர விஜய் ரசிகா் மன்ற மாணவரணி அமைப்பாளா் அரவிந்தன்(19), மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தமிழரசு(25) உள்ளிட்ட 30 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள பலரைத் தேடி வருகின்றனா்.
இந்த நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா, சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப்குமாா் உள்ளிட்டோா் கிருஷ்ணகிரியில் நேரடி ஆலோசனையில் ஈடுபட்டனா். கலவரத்தில் ஈடுபட்டோா் யாா், அவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரங்களை, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதரிடம் கேட்டறிந்தனா்.
கிருஷ்ணகிரி நகரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி. சக்திவேல், துணை காவல் கண்காணிப்பாளா் குமாா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.