ஒசூரில் 350 தபால் வாக்குகள் பதிவு
By DIN | Published On : 26th April 2019 03:05 AM | Last Updated : 26th April 2019 03:05 AM | அ+அ அ- |

ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், இதுவரை 350 தபால் வாக்குகள் வந்துள்ளதாக ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியும் ஒன்றாகும். இத்தொகுதிக்கான 1,579 தபால் வாக்குகளில், இதுவரை 350 வாக்குகள் வந்துள்ளன. அவை ஒசூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் வாக்குப் பெட்டியில் போடப்பட்டன.
பின்னர், ஒசூர் தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான விமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,579 தபால் வாக்குகள் உள்ளன. நாள்தோறும் வரும் தபால் வாக்குகள் அடங்கிய கவரை பெற்றுக்கொண்டு, அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள அறையில் உள்ள வாக்குப் பெட்டியில் அந்த கவர் போடப்படும். இதுவரை 350 தபால் வாக்குகள் வந்துள்ளன. வரும் மே 23-ஆம் தேதி காலை 7 மணி வரை வரும் தபால் வாக்குகள் இந்த பெட்டியில் போடப்படும். பின்னர் அவை, வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றார். அப்போது, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம் உடன் இருந்தார்.