கிருஷ்ணகிரியில் அறிவியல் கண்காட்சி: பேரூஅள்ளி பள்ளிக்கு முதல் பரிசு
By DIN | Published On : 12th February 2019 08:53 AM | Last Updated : 12th February 2019 08:53 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பேரூஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை, மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், தொடக்கி வைத்து, மாணவ, மாணவியரின் அறிவியல் திறமைகளைப் பார்வையிட்டார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, தலைமையாசிரியர் மகேந்திரன், தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன், நாராயணன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
இந்தக் கண்காட்சியில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். சூரிய சக்தி மூலம் மின்சாரம், நவீன வேளாண்மை, மூலிகை தாவரங்கள், இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளை மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தியிருந்தனர்.
மாவட்ட அளவிலான இந்தக் கண்காட்சியில் பேரூஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சரவணவேல் முதல் பரிசும், திப்பசந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாரிமுத்து, தேவராஜ் ஆகியோருக்கு இரண்டாம் பரிசும், கிட்டம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரிணி, கொத்தப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹரிஷ் ஆகியோர் மூன்றாம் பரிசையும் வென்றனர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தகுதி பெறுவர். அங்கு வெற்றி பெறுவோர், அகில இந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெறுவர்.