உத்தனப்பள்ளியில் தொழிலாளர் முன்னேற்றச் சங்க கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், சூளகிரி தெற்கு ஒன்றியம் உத்தனப்பள்ளியில் அமைப்பு சாரா மற்றும் கூட்டுறவு நியாய விலைக் கடை மின்வாரிய தொழிலாளர் முன்னேற்றச் சங்க கொடியேற்று விழாவுக்கு, மாவட்டக் கவுன்சில் செயலர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை செயலர் கிருஷ்ணன், நியாய விலைக் கடை மாநிலச் செயலர் பொன்ராம், மாவட்டக் கவுன்சில் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் பி.வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலரும், தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மேற்கு மாவட்ட துணைச் செயலரும், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பி.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சங்கக் கொடியேற்றி வைத்து பேசினர்.
அவர்கள் பேசும் போது, காட்டு யானைகளால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைகின்றன. எனவே, வனத் துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி விவசாயிகளின் பயிர்களை பாதுகாக்க வேண்டும். மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 50 பேர் அதிலிருந்து விலகி, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் யுவராஜ், ஒசூர் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஏ. சத்யா, தலைமை செயற்குழ உறுப்பினர் சுகுமாரன், கெலமங்கலம் ஒன்றியச் செயலர் கணேசன், நிர்வாகிகள் வீராரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கவுன்சில் பொருளாளர் பசவராஜ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.