ஒகேனக்கல் காவிரியில் மூழ்கிய இளைஞர் உடல் மீட்பு
By DIN | Published On : 04th January 2019 08:16 AM | Last Updated : 04th January 2019 08:16 AM | அ+அ அ- |

புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட ஒகேனக்கல் வந்த இளைஞர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு பின் அவரது உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், அல்லாபுரம் அருகே குளத்துமேடு தெரு பகுதியைச் சேர்ந்த அன்வர் பாஷா மகன் மஸ்தான் (27), தருமபுரி சத்யா நகர் பகுதியில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸ் தயாரிக்கும் கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் புத்தாண்டு விடுமுறைக்காக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த போது, ஆலாம்பாடி பகுதியில் குளித்து கொண்டிருந்தாராம். பின்னர், அவரின் நண்பர்கள் வீடு திரும்பிய நிலையில், இரண்டு தினங்களாக மஸ்தானைக் காணவில்லையாம்.
இந்த நிலையில், அவரது நண்பர்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை நடத்திய வந்த நிலையில், ஊட்டமலைப் பகுதியில் மஸ்தானின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.