கிருஷ்ணகிரியில் புத்தகத் திருவிழா நிறைவு
By DIN | Published On : 04th January 2019 08:17 AM | Last Updated : 04th January 2019 08:17 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் புத்தகத் திருவிழா நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்ட விதைகள் அமைப்பு, ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா கடந்த டிச. 24 முதல் ஜன. 2-ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்தது.
இதன் நிறைவு விழாவுக்கு, அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்தார். மத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் நடராஜன், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர் ராஜா, தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஆர்.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, புத்தக அரங்கினை பார்வையிட்டு இல்லந்தோறும் நூலகம் என்ற புத்தகத் தொகுப்பினை ரூ.1,000-க்கு வழங்கினார். இல்லந்தோறும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் இத் திட்டத்துக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 70 குழந்தைகளுக்கு புத்தகத் தொகுப்பினை வழங்குவதாக அறிவித்திருந்தார். அந்த திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகள் 70 பேருக்கு புத்தகத் தொகுப்பை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக, விதைகள் அமைப்பு நிறுவனர் கணேசன் வரவேற்றார். விதைகள் அமைப்புத் தலைவர் அருண்குமார் தொகுத்து வழங்கினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், சிறந்த அரங்குகளுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் செய்திருந்தார்.