டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
By DIN | Published On : 04th January 2019 08:19 AM | Last Updated : 04th January 2019 08:19 AM | அ+அ அ- |

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து பூட்டிய கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே உள்ள கே.எட்டிப்பட்டி பிரிவு சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த மதுக் கடையால், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மதுக்கடையை அகற்ற வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த மதுக்கடையை அருகிலுள்ள சூரம்பட்டி கிராமத்துக்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டதாக கிராம மக்களுக்கு தகவல் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடை வேண்டாம் என கே.எட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ் மற்றும் உதவியாளர் சிவக்குமார் ஆகியோரை அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டினர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடையே பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், 50 பேரின் மீது வழக்குப் பதிவு செய்த சாமல்பட்டி போலீஸார், 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.