சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் வெறிச்சோடியது
By DIN | Published On : 07th January 2019 08:56 AM | Last Updated : 07th January 2019 08:56 AM | அ+அ அ- |

மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்திருந்தது. இதனால், சுற்றுலாத் தலம் வெறிச்சோடி காணப்பட்டது.
பூங்கா, பிரதான அருவி, முதலைப்பண்ணை, தொங்குப்பாலம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைந்திருந்தது. இதனால் பரிசல் ஓட்டிகள், எண்ணெய் மசாஜ் செய்பவர்கள் வேலையில்லாமல் பயணிகளுக்காகக் காத்திருந்தனர். கடைகளிலும் வியாபாரம் குறைந்திருந்தது.
வழக்கமாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கணிசமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த ஒகேனக்கல்லில், தற்போது பல்வேறு இடங்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அவ்வப்போது வரும் சுற்றுலாப் பயணிகள் தற்போது பரவலாக கடும் பனிப் பொழிவு நிலவுவதால், ஒகேனக்கல்லுக்கு வருவது குறைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மாமரத்துக் கடவு பரிசல் துறையில் ஒருசிலரே பரிசல் பயணம் மேற்கொண்டனர். மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் மீன் கடைகள் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடின.
பொங்கலுக்குப் பிறகு கட்சி தொடர்பான முடிவை அறிவிப்பார் ரஜினிகாந்த்: சத்யநாராயணராவ் தகவல்
ஒசூர்,ஜன.6. பொங்கலுக்குப் பிறகே கட்சி தொடர்பான முடிவை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று அவரது அண்ணன் சத்யநாராயணராவ் தெரிவித்தார்.
தேன்கனிக்கோட்டை உனிசெட்டி கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1,069 பேருக்கு வேட்டி, சட்டை, சேலைகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கி பேசும் போது, பொங்கலுக்குப் பிறகு கட்சி சம்பந்தமான முடிவுகளை ரஜினிகாந்த் அறிவிப்பார் என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். கர்நாடக மாநில தலைவர் சந்திரகாந்த் நல உதவிகளை வழங்கினார். கெலமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், முன்னாள் மன்ற தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். தளி ஒன்றியச் செயலாளர் ரவி, செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கெலமங்கலம் ஒன்றிய இணைச் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார். ஒசூர் சத்யா ஆர்டஸ் சத்தியநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டார்.