போச்சம்பள்ளி வழியாக லாரியில் பெங்களூரு செல்லும் கோதண்டராமர் சிலையைக் புலியூர் சாலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இச்சிலையை வடிவமைக்க 64 அடி உயரம் 26 அடி அகலம் கொண்ட கல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது.
இதில் முகம் மட்டும் வடிவமைத்து, கடந்த மாதம் 7-ஆம் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. பின்னர், ஊத்தங்கரையில் இருந்து போச்சம்பள்ளி அடுத்த ஒலைப்பட்டி அருகேயுள்ள சிப்காட் அருகே வெள்ளிக்கிழமை வந்தடைந்த கோதண்டராமர் சிலை ஏற்றிவந்த லாரியின் பத்து டயர்களும் வெடித்தன. மேலும், கூடுதல் என்ஜினின் பேரிங் உடைந்து சாலையில் நின்றது. பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட தொழில்நுட்பப் பணியாளர்கள் உடைந்த பாகங்களை சரி செய்தனர். பின்னர், சனிக்கிழமை புறப்பட்ட லாரி புலியூர் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வந்தடைந்தது.
இச் சிலையைக் காண்பதற்காக சேலம், தருமபுரி, அரூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், திருப்பத்தூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புலியூரில் குவிந்தனர். பனக்காட்டூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இச் சிலை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் தனது பயணத்தை தொடங்கி போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரை சென்றடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.