பாரூர் ஏரி வறண்டதால் தாமதமாகும் கார் பருவம்? மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்

பாரூர்  ஏரி வறண்டு காணப்படுவதால்  கார் பருவ சாகுபடிக்கு  தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால்,  தென்மேற்கு பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர். 


பாரூர்  ஏரி வறண்டு காணப்படுவதால்  கார் பருவ சாகுபடிக்கு  தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால்,  தென்மேற்கு பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர். 
கிருஷ்ணகிரி மாவட்டம்,  போச்சம்பள்ளி அடுத்த பாரூர் ஏரிக்கு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து நீர்ப்பாசன வசதி பெறப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களில் சுமார் 4,000 ஹெக்டேரில் நெல் பயிரிட்டு வருகின்றனர்.  விவசாயிகள் தங்களது நிலங்களில்  சன்ன ரகம்,  அமோகா மற்றும்  குண்டு ரக நெல் நாற்று விட்டு நடவுக்காக காத்திருக்கின்றனர்.  இந்த விவசாய சாகுபடிக்கு பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிடைக்க பெறும் தண்ணீரைக் கொண்டுதான் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 7 ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு பிரதான கால்வாயின் மூலம் 1583.75 ஏக்கர் நிலங்களும், பாரூர் பெரிய ஏரியின் மேற்கு பிரதான கால்வாயின் மூலம் 813.67 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.  இதன் மூலம் பாரூர்,  அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம்,  கோட்டப்பட்டி,  ஜிங்கல்கதிரம்பட்டி,  தாதம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும் பாரூர் விவசாயிகள் தென்மேற்கு பருவத்தில் கார் சாகுபடியும், வடகிழக்குப் பருவத்தில் பிசான சாகுபடியும் செய்து வருகின்றனர். ஜூன்  தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் கார்  சாகுபடிக்காக விவசாயிகள் மே மாதம்  இறுதியில் நாற்றுப்பாவும் பணியை தொடங்குவர். ஜூன் முதல் வாரத்தில் பாரூர் ஏரியில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டதும் 3 ஆவது வாரத்தில் நெல் நடவுப் பணியில் ஈடுபடுவர். 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரூர் ஏரியில் 249 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்கும் நிலையில் தற்போது 80 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடும் தண்ணீர் கால்வாய்கள் வழியாக சுற்றுவட்டார  ஏரிகளுக்கு சென்று  நிரம்பி அந்த தண்ணீர் விவசாயம்  மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது கே.ஆர்.பி. அணை வறண்டு கிடப்பதால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.  இதனால் மானாவாரி குளங்களும், ஏரிகளும் வறண்டுவிட்டதால் நிகழாண்டு கார் பருவ சாகுபடி  பணியைத் தொடங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனிடையே,  தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே  தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
பருவ மழை தொடங்கி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் அதிகரித்தால் மட்டுமே தென்பெண்ணை ஆறுகள் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் பெறப்பட்டு இப்பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும் என்பதால் சாகுபடி பணியை தொடங்காமல் விவசாயிகள் பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் பாரூர் ஏரியை ஒட்டியுள்ள சில இடங்களில் நீர்வரத்து குளங்களில் இருந்து கிடைக்கும் நீரைக் கொண்டு நெல் நடவு செய்யும் பணியில் ஒரு சிலர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் நீரின்றி  வாழை,  கத்தரி, முள்ளங்கி, தக்காளி போன்ற பயிர்கள் கருகி வருகின்றன என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து  அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் :  ஜூன் மாதம்  தொடங்கியும், இன்னும் பாரூர் ஏரிக்கு தண்ணீர் வராததால் இந்த ஆண்டு டு கார் பருவம் சாகுபடி  கேள்விக் குறியாகவே உள்ளது என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com