சூறைக் காற்றில் சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படுமா?
By DIN | Published On : 09th June 2019 05:25 AM | Last Updated : 09th June 2019 05:25 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கடந்த வாரம் மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்தன.200-க்கும் மேற்பட்ட மின் வாரியப் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சரி செய்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி ராயப்பமுதலி தெருவில் சாய்ந்த மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்திய மின் வாரியப் பணியாளர்கள் சாலை ஓரத்தில் கிளைகளை விட்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
பணியில் அலட்சியம்: மேலும், பேரிடர் மேலாண்மையின் போது அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், மழையால் சாய்ந்த மரங்களை மின் விநியோகத்துக்காக மின்வாரிய பணியாளர்கள் ஓரளவுக்கு அப்புறப்படுத்தினர்.
ஆனால், நகராட்சி, வீட்டு வசதி வாரியம், வருவாய்த் துறையினர் யாரும் மின் வாரிய பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை.
அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றாததால், மின்சாரம் இன்றி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளானதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பல இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை.