சிறப்பு பயிற்றுநர்களுக்கு பயிற்சி முகாம்
By DIN | Published On : 14th June 2019 10:36 AM | Last Updated : 14th June 2019 10:36 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள், சிகிச்சை அளிப்போர் (தெரபிஸ்ட்டுகள்) ஆகியோருக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில், வியாழக்கிழமை தொடங்கிய இந்த பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது, பயிற்றுநர்களுக்கு கைக்கணினிகளை வழங்கி, அதன் நோக்கம், பயன்பாடு குறித்து அவர் பேசினார்.
கைக்கணினி மூலம் ஆட்டிஸம், மனவளர்ச்சி குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மூளை முடக்குவாதம், பார்வைக் குறைபாடு, கற்றல் குறைபாடு உள்ளிட்ட 21 வகையான மாற்றுத் திறன் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்றுத் தருவது குறித்தும், புலன் ஒருங்கிணைப்பு, ஒலி வேறுபாடு, உறவு முறைகள், உடல் பாகங்கள், பழங்கள், விலங்குகள் ஆகியவை குறித்தும் செயலி மூலம் எளிதாக கற்றுத் தர முடியும் என்றார்.
இந்தப் பயிற்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பயிற்றுநர்கள், சிகிச்சையளிப்பாளர்கள் என 52 பேர் பங்கேற்று
வருகின்றனர்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.