முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 14th June 2019 10:43 AM | Last Updated : 14th June 2019 10:43 AM | அ+அ அ- |

முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில், 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது ரூ.50 ஆயிரம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடங்கியதாக இருக்கும். அதன்படி, இந்த விருது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2019-ஆம் ஆண்டுக்கான முதல்வர் மாநில இளைஞர் விருது ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்பட
உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் ஜூலை 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.