அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் ஓய்வூதியத் திட்ட அடையாள அட்டை அளிப்பு
By DIN | Published On : 06th March 2019 09:00 AM | Last Updated : 06th March 2019 09:00 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி ஓய்வூதியத் திட்டத்துக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தத் திட்டத்தை ஆட்சியர் சு.பிரபாகர், கே.அசோக்குமார் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்தத் திட்டத்தில் சேர, அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் சேரும் பயனாளி மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரையில் வயதுக்கு ஏற்ப செலுத்த வேண்டும்.
இ - சேவை மையம் மூலம் ஆதார் அட்டை, தொலைபேசி எண், வங்கி சேமிப்புக் கணக்கு எண், ஜன்தன் வங்கிக் கணக்கு விவரம் போன்றவற்றை கணியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்த நிலையில், தொழிலாளி செலுத்தப்பட்ட வேண்டிய மாதாந்திர தொகை கணினி மூலம் குறுஞ்செய்தியாக பெறுவர். பதிவேற்றத்துக்கு பிறகு, ஓய்வூதியத்துக்கான கணக்கு தொடங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 900 தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெற பதிவு செய்துள்ளார்கள். இவர்களுக்கு, ஓய்வூதிய கணக்கு தொடங்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும். இந்த நிகழ்வில் வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் வெற்றிச் செல்வன், சமூக பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையர் முருகேசன், அமலாக்க அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தருமபுரியில்...தருமபுரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்துக்கான அடையாள அட்டையை வழங்கி ஆட்சியர் சு.மலர்விழி பேசியது :
அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். இத்திட்டம் அத்தொழிலாளர்களுக்கு முதுமையில் மிகுந்த மகிழ்வை அளிக்கும்.
இத்திட்டத்தில், 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து பயன்பெற வேண்டும்.18 வயது உடையோர் மாதந்தோறும் ரூ.55 காப்பீட்டுத் தொகையும், 40 வயது உடையோர் ரூ.200 காப்பீட்டுத் தொகையும் செலுத்த வேண்டும். 60 வயது வரை இடைவிடாமல் காப்பீட்டுத் தொகை செலுத்தினால் 60 ஆண்டுகளுக்குப் பின்பு மாதம்தோறும் ரூ.3,000 ஓய்வூதியமாக கிடைக்கும். இத்திட்டத்தில் சேர விருப்பம் உள்ள பயனாளிகள் இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்றார்.
விழாவில், தொழிலாளர் உதவி ஆணையர் கே.பி.இந்தியா, தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் (சேலம்) துணை இயக்குநர் (பொ) எஸ்.சங்கர், துணை இயக்குநர் (தகவல் தொடர்பு) மா.கார்த்திகேயன், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன முதுநிலை மேலாளர் டி.வெங்கடேசன், ஓய்வூதியத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் லட்சுமி மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.