பர்கூரில் அகில இந்திய வாலிபால் போட்டி: கேரள மாநில அணிகள் சாம்பியன்
By DIN | Published On : 06th March 2019 09:03 AM | Last Updated : 06th March 2019 09:03 AM | அ+அ அ- |

பர்கூரில் நடைபெற்ற 14 - ஆவது அகில இந்திய வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில், கேரள மாநில மின்சார வாரிய அணியும், ஆண்கள் பிரிவில் கொச்சியைச் சேர்ந்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பர்கூர் கைப்பந்து கழகம் சார்பில் 14-ஆவது அகில இந்திய வாலிபால் போட்டி கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் லீக் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன.
மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி நாளான திங்கள்கிழமை பெண்கள் பிரிவில் கிழக்கு ரயில்வே அணியும், கேரள மாநில மின்சார வாரிய அணியும் மோதின. இதில் திருவனந்தபுரம், கேரள மாநில மின்சார வாரிய அணி 25 - 13, 25 - 16, 25 - 16 என்ற புள்ளிகளில் 3-க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.
ஆண்கள் பிரிவில் கொச்சியைச் சேர்ந்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும், திருவனந்தபுரம் கேரள மாநில மின்சார வாரிய அணியும் விளையாடின. இதில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியானது 30 - 28, 26 - 24, 25 - 16 என்ற புள்ளி கணக்கில் 3 - க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.