ஜப்பானிய, சீன கவின் கலைகளை பயின்ற அரசுப் பள்ளி மாணவர்கள்
By DIN | Published On : 28th March 2019 09:08 AM | Last Updated : 28th March 2019 09:08 AM | அ+அ அ- |

காவேரிப்பட்டணம் அருகே சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜப்பானிய ஓரிகாமி, சீனாவின் கிரிகாமி என்ற கவின் கலைகள் குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
காகிதத்தை வெட்டவோ, ஓட்டவோ செய்யாமல், மடித்து உருவங்களை உருவாக்குவது ஜப்பானிய கலை ஓரிகாமியாகும்.
அதேபோல் காகிதத்தை வெட்டி இயற்கை காட்சிகளை உருவாக்குவது கிரிகாமி கலை என அழைக்கப்படுகிறது. இந்தக் கலைகளை, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கலைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டன.
இந்தப் பயிற்சியை கும்பகோணத்தைச் சேர்ந்த கலைஞர் தியாக சேகர் பயிற்சி அளித்தார். மாணவர்களுக்கு கத்திரிக்கோல், பசை இல்லாமல் காகிதங்களை வெறும் மடிப்பில் மூலம் கொக்கு, மயில், குயில், வாத்து போன்ற பறவைகளின் உருவங்கள், சிங்கம், புலி, குரங்கு போன்ற விலங்குகளின் உருவங்களை உருவாக்கப் பயின்றனர். கத்திரிக்கோலை பயன்படுத்தி, உருவங்களை உருவாக்குவது குறித்தும் பயின்றனர். இந்த கவின் கலைகளை, மாணவர்கள் உற்சாகத்துடன் கற்றனர். மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் இந்தக் கலைகள் கற்பிக்கப்பட்டன.
இந்தப் பயிற்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வசந்தி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் சுகவன முருகன், வெங்கட்ரமணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். பயிற்சியைப் பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...