மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழு மேலாண்மை
By DIN | Published On : 05th May 2019 05:18 AM | Last Updated : 05th May 2019 05:18 AM | அ+அ அ- |

மக்காச்சோளப் பயிர் சாகுபடியில் படைப்புழு மேலாண்மை குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பி.சுசிலா விவசாயிகளுக்கு விளம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஜூலை முதல் கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் அதிகரித்து விளைச்சல் பாதிக்கப்பட்டது. மக்காச்சோளப் பயிரில் 15 நாள்கள் முதல் வளரக் கூடிய குருத்துப் பகுதியில் இந்தப் புழுவானது சேதத்தை ஏற்படுத்துகிறது.
இந்த புழு, பயிரிலிருந்து வெளிவரும் இலைகளை உண்ணுவதால், அதன் இலைகள் வரிசையான சிறிய, பெரிய வட்ட வடிவில் அல்லது வடிவமற்ற துவாரங்களுடன் காணப்படும். சில செடிகளில் இலைகளின் மேல் பகுதி முற்றிலும் உண்ணப்படுவதால், இலை மடிந்தும் காண்படும். இந்தப் புழுக்கள் கதிர்களின் நுனி மற்றும் காம்பு பகுதியை உண்ணும் திறன் கொண்டது.
தாய் அந்துப் பூச்சிகள் 100 முதல் 200 முட்டைகளை குவியலாக இலைகளில் இட்டு, அதனை வெள்ளி நிற ரோமத்தால் மூடிவிடும். இந்த முட்டைகளில் இருந்து 2 அல்லது 3 நாள்களில் பச்சை நிற இளம் புழுக்கள் வெளி வந்து, இளம் இலைகளின் பச்சையத்தை சுரண்டி உட்கொள்ளும். அதன்பின் குருத்து இலைகளை சேதப்படுத்தும் 15 அல்லது 20 நாள்களில் முதிந்த புழுக்கள், மண்ணில் சென்று கூட்டுப்புழுவாக மாறிவிடும். கூட்டுப்புழுக்களில் இருந்து 8 அல்லது 9 நாள்களில் தாய் அந்து பூச்சிகள் வெளிவந்து 10 முதல் 15 நாள்கள் உயிரோடு இருந்து முட்டைகளை இடும். தாய் அந்து பூச்சிகள் இரவு நேரங்கலில் செயல்படும்.
ஆண் பூச்சிகளின் அரக்கு நிற முன் இறக்கைகளில் நுனிப் பகுதியில் முக்கோண வடிவ வெள்ளி புள்ளிகள் காணப்படும். பெண் பூச்சிகளில் இந்த முக்கோண புள்ளி இருக்காது. ஆண் மற்றும் பெண் பூச்சிகளில் வெள்ளை நிறமான பின் இறக்கைகளின் ஓரத்தில் அரக்கு நிறம் காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழி முறைகள்: இந்தப் புழுவினை கட்டுப்படுத்த ஏப்ரல், மே மாதங்களில் ஆழமான உழுவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்படும் பொழுது சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அவை அழிக்கப்படும். அவ்வாறு செய்வதால் அந்துப்பூச்சி உருவாகுதலை தடுத்து மேற்கொண்டு அடுத்த பயிரிடும் பருவத்துக்கு பாதிப்பு வராமல் தடுக்க இயலும்.
அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோளப் பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு அதிக அளவில் தாக்கும். உழுவு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இடுவதன் மூலம் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்தி, அந்துப்பூச்சி வெளிவருவதை தடுக்க இயலும். விதை நேர்த்தி செய்வதன் மூலமும் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.
பயிர் மேலாண்மை: குறைவான பயிர் இடைவெளியால் பயிர்களுக்கிடையே படைப்புழு வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, மக்காச்சோளத்துக்கு 60-க்கு 25 செ.மீ. அளவுக்கு பயிர் இடைவெளியும், மானாவாரி மக்காச்சோளத்துக்கு 45-க்கு 25 செ.மீ. பயிர் இடைவெளியும் கொண்டு பயிரிட வேண்டும்.
மக்காச்சோளப்பயிரில் கதிர் உருவாகும் பருவத்தில் படைப்புவுக்களை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளை எளிதில் தெளிப்பதற்கு ஒவ்வொரு 10 வரிசை பயிருக்கும் 75 செ.மீ. இடைவெளி விட வேண்டும்.
தாய் அந்துப்பூச்சிகளை கவனிக்க மற்றும் கட்டுப்படுத்த விளக்குப்பொறிகள் அல்லது சாதாரன மின் விளக்குகளுக்கு கீழ் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கடி இடம் மாற்றி வைக்க வேண்டும்.
இயற்கை ஒட்டுண்ணிகள் மற்றும் இரைவிழுங்கிகளை ஊக்குவிக்க குறுகிய கால பயிர்களான தட்டைப்பயிறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிர்களை வரப்பில் பயிரிட வேண்டும். அந்துப்பூச்சிகளின் முட்டைக்குவியல்களை சேகரித்து அழிக்க வேண்டும். தொடர்ந்து மக்காச்சோளத்தை பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த இயலும்.
விசைத் தெளிப்பானை மட்டுமே உபயோகப்படுத்த பூச்சி மருந்தை தெளிக்க வேண்டும். ஒரு முறை உபயோகித்த பூச்சி மருந்தை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. பூச்சி மருந்தை, செடியின் குருத்துப் பகுதியை நோக்கி தெளிக்க வேண்டும்.
மேலும் இந்தப் புழு, இதரப் பயிர்களான கரும்பு, நெல், வெங்காயம் போன்ற பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்தவல்லது. படைப்புழு தாக்குதலை சீரிய முறையில் கட்டுப்படுத்த விவசாயிகள், அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி மேலும் தெளிவு பெறலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.