நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 05th May 2019 03:13 AM | Last Updated : 05th May 2019 03:13 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், இப்பகுதியில் உள்ள சிறிய நீர்த்தேக்கத் தொட்டியினை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட அரசுப் பேருந்து பணிமனை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி, பேருந்து பணிமனை பகுதியில் கடந்த 2014-2015-ஆம் நிதியாண்டில் பென்னாகரம் ஒன்றிய நிதியிலிருந்து ரூ.1.60 லட்சத்தில் ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய சிறிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவு வரும் நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இந்த சிறிய நீர்த்தேக்கத் தொட்டி வறண்டு காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைக்காக சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அருகில் உள்ள சிறிய நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் குடிநீர் குழாய் அமைத்து, சிறிய நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...