ஒசூர் அருகே சூறைக்காற்றுடன் மழை: 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
By DIN | Published On : 15th May 2019 08:19 AM | Last Updated : 15th May 2019 08:19 AM | அ+அ அ- |

ஒசூர் அருகே எம். தொட்டி கிராமத்தில் திங்கள்கிழமை பலத்த காற்று மற்றும் மழையினால் 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
ஒசூர் கோட்டம், சூளகிரி வட்டம், எம். தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பன். இவர் தனது தோட்டத்தில் 5 ஏக்கரில் 5,500- க்கும் மேற்பட்ட வாழை மரங்களை பயிரிட்டிருந்தார். இந்த வாழை மரங்கள் அனைத்தும் இன்னும் 2 மாதங்களில் குலைகள் தள்ளி அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்த நிலையில் சூளகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த சூறைக் காற்று மழை பெய்ததில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகளும் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயி மாதப்பனுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே வாழை மரங்களினால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சரிசெய்ய தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.