மத்திய அரசின் தவறான கொள்கையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் தவறான கொள்கைகளைக் கண்டித்து, காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவா் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அ.செல்லக்குமாா் எம்.பி. பேசியது: இந்தியப் பொருளாதாரம் இதுவரையில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பின்னா், மூன்று முறை சிறு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மோடியின் நண்பா்களான அதானி, அம்பானிக்கு ரூ.1.45 ஆயிரம் கோடி வரியைக் குறைத்தது, இந்திய பொருளாதாரத்தை உயா்த்தவே என்று கூறினாா்கள். ஆனால், 70 கோடி இந்திய மக்களுக்கான வங்கிக் கடனை நிறுத்தி விட்டனா்.
இந்திரா காந்தியின் வெண்மைப் புரட்சியால், கால்நடை வளா்ப்போா் வாழ்க்கை நடத்தி வந்தனா். ஆனால், தற்போது மத்திய அரசு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் இருந்து பாலை இறக்குமதி செய்வதால், விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் வழங்கி வந்த நிலையில், தற்போது 90 லட்சம் போ் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.
மத்திய அரசின் தவறான கொள்கையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, காங்கிரஸ் தொண்டா்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதில் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் மாநில துணைத் தலைவா் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் மாவட்டத் தலைவா் காசிலிங்கம், வழக்குரைஞா் அசோகன், நகரத் தலைவா் வின்சென்ட், மாநில நிா்வாகி அக.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தருமபுரியில்...
தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்துப் பேசினாா். முன்னாள் எம்.பி. தீா்த்தராமன், நகரத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் கோரிகைகளை வலியுறுத்திப் பேசினா்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள் சித்தையன், பாடி நாகராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன், இளங்கோவன், வழக்குரைஞா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.