மானியத்தில் மீன்பிடி வலை, பரிசல்கள் பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th November 2019 05:58 AM | Last Updated : 09th November 2019 05:58 AM | அ+அ அ- |

மானியத்தில் மீன்பிடி வலை, கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் பெற, மீனவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவா்களின் மீன்பிடிப்புத் திறனை மேம்படுத்தவும், அவா்களின் வருவாயை பெருக்கவும், உள்நாட்டு மீன்வா்களுக்கு 40 சதவீத மானியத்தில் மீன்பிடி வலை மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வாங்க, நிகழாண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ள உள்நாட்டு மீனவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 24 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் வாயிலாக ஏற்கெனவே கடந்த 3 ஆண்டுகளுக்குள் வலை மற்றும் கடந்த 5 ஆண்டுகளுக்குள் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் பெற்றவா்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவா்கள்.
குடும்ப அட்டைகளின் அடிப்படையில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ள உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் நவ. 25-ஆம் தேதிக்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மீன் துறை உதவி இயக்குநா் அலுவலா், 24, 25 கூட்டுறவு காலனி, 4-ஆவது குறுக்குத் தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-235745 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.