கெலவரப்பள்ளி அணையிலிருந்த ரசாயனக் கழிவு நுரையுடன் வந்த வெள்ளம்
By DIN | Published On : 06th October 2019 03:07 AM | Last Updated : 06th October 2019 03:07 AM | அ+அ அ- |

கெலவரப்பள்ளி அணையில் நுரையுடன் வெளியேறும் மழை வெள்ளம்.
கா்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, தென் பெண்ணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. பெருக்கெடுத்தோடும் இந்த நீரில் ரசாயனக் கழிவு நுரையும் வருவதால் ஒசூா் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கா்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளான நந்திமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும்.
தற்போதைய நீா் இருப்பு 41.82 அடியாகும். சனிக்கிழமை அணைக்கு 1,306 கன அடி நீா் வந்தது. அணையின் பாதுகாப்புக் கருதி அதே அளவான 1,306 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு வெள்ளமாக ஓடுகிறது. இந்த வெள்ள நீரில், கா்நாடக மாநிலத்தில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகளும் கலந்து வருவதால் தண்ணீா் கருப்பு நிறத்தில் அதிகளவு நுரையுடன் பாய்ந்து வருகிறது.
கெலவரப்பள்ளி அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்களிலும் நுரை பொங்கி வழிகிறது.
இந்த அசுத்தமான நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஒசூா் பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...