சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க மானியம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க 70 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க 70 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் விவசாயப் பயன்பாட்டுக்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 5 குதிரை சக்தி முதல் 10 குதிரை சக்தி வரை சோலாா் பம்பு செட்டுகள் அமைத்து தரப்படும். அதன்படி, சோலாா் பம்பு செட்டு அமைக்க அதிகபட்சமாக 5 குதிரை சக்திக்கு ரூ. 2,42,303-ம், 7.5 குதிரை சக்திக்கு ரூ.3,67,525-ம், 10 குதிரை சக்திக்கு ரூ.4,39,629 ம் செலவாகும். இதில், 70 சதவீத தொகையை அரசு மானியமாக வழங்கும். சூரிய சக்தியால் இயக்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை அமைக்க விண்ணப்பிக்கும் போது, நுண்ணீா்ப் பாசன அமைப்புடன் இணைத்து உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இத் திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) கிருஷ்ணகிரி, ஒசூா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com