ஊத்தங்கரை ஊராட்சிகளின் அவலம்: அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய நிதியின்றிக் கடனில் தவிக்கும் மன்றத் தலைவர்கள்

ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி கூட வழங்காமல் உள்ளதால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் ஊராட்சித் தலைவர்கள் திணறி வருகின்றனர்.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் 34 ஊராட்சிமன்ற அலுவலகங்கள் உள்ளது. இதில் அனைத்து ஊராட்சிகளுக்கும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள் பதவி வகித்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கரோனா நோய் தொற்று காரணமாக பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கரோனா நோய்த்தடுப்பு பணிக்காக பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சென்று தூய்மைப்படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல், அடிப்படைத் தேவைகளான குடிநீர் ,தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் தூய்மை படுத்துதல் போன்ற அத்தியாவசிய தேவைகளை செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து ஊராட்சிக்கும் இதுவரை எந்த ஒரு நிதியும் போடாமல் இழுத்தடித்து வருவதாக குற்றம் கூறுகின்றனர். பணம் இல்லாததால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்களுக்கு தெரிந்த கடைகளில் கடன் வைத்து பஞ்சாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிவந்து பணிகளை செய்துள்ளனர்.

தற்போது ஐந்து மாதத்தை கடந்து விட்டதால் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கடன் கொடுத்த கடைக்காரர்களும் பணம் தரக்கோரி நெருக்கடி தந்து வருகின்றனர். இந்நிலையில்  அடிப்படைத் தேவைகளான குடிநீர் குழாய் அமைத்தல், தெரு விளக்கு போன்ற அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள கடன் வாங்கி கூட பணியை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் தண்ணீர் ஆப்ரேட்டர் பணி செய்து வரும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.450 சம்பளம் வழங்க கூட நிதி இல்லாமல் தவித்து வருவதாக பஞ்சாயத்து தலைவர்கள் புலம்பி வருகின்றனர். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சுமார் இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை மதிப்பிலான கடனில் இயங்கி வருகிறது.

பஞ்சாயத்துக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி கூட வழங்காமல் உள்ளதால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். பஞ்சாயத்து தலைவர்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com