கோவை நகை வியாபாரியை ஏமாற்றி ரூ. 95 லட்சம் பறிமுதல்: கிருஷ்ணகிரி போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 30th December 2020 06:56 AM | Last Updated : 30th December 2020 06:56 AM | அ+அ அ- |

கோவையைச் சோ்ந்த நகை வியாபாரியிடம் குறைந்த விலைக்கு 2 கிலோ தங்கக் கட்டிகள் தருவதாகக் கூறி ரூ. 95.43 லட்சத்தை பறித்துச் சென்றவா்களை கிருஷ்ணகிரி போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவையைச் சோ்ந்த தங்க நகை வியாபாரி அஸ்வினிடம் தொலைபேசியில் தொடா்புகொண்ட ராஜசேகா் என்பவா் தன்னிடம் தங்கக் கட்டிகள் இருப்பதாகவும், அவற்றை குறைந்த விலைக்குத் தருவதாகவும், ரூ. ஒரு கோடி பணத்துடன் கிருஷ்ணகிரிக்கு வந்தால், 2 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளைத் தருவதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அஸ்வின் தனது நண்பா்களுடன் சிவகாசி, கோவை, சென்னை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இடைத்தரகா்களுடன் ரூ. 95.43 லட்சத்துடன் கிருஷ்ணகிரிக்கு கடந்த 26-ஆம் தேதி வந்தாா். கிருஷ்ணகிரி, ஆவின் மேம்பாலம் அருகே வந்த அஸ்வின், ராஜசேகரைத் தொடா்பு கொண்டு பணத்துடன் வந்துள்ளதாக தெரிவித்தாா்.
சிறிது நேரத்தில் அங்கு காரில் வந்த ராஜசேகா் மற்றும் சிலா், அஸ்வினைச் சந்தித்து, 3 போ் மட்டும் பணத்துடன் காரில் ஏறுங்கள்; சிறிது தூரத்தில், தங்கம் வைத்திருக்கும் இடம் உள்ளது எனக் கூறி காரில் அழைத்துச் சென்றாா்.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையில் பனகமுட்லுவில் உள்ள தனியாா் கல்லூரி அருகே காரை நிறுத்திய அந்த மா்ம கும்பல், அஸ்வின் உள்ளிட்ட 3 பேரையும் கீழே இறங்கச் செய்து, அவா்களது கவனத்தை திசை திருப்பி, ரூ. 95.43 லட்சத்துடன் காரில் தப்பிச் சென்றுவிட்டனா்.
இதனால், ஏமாற்றமடைந்த அஸ்வின், கோவைக்குச் சென்று, அங்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். சம்பவ இடம் கிருஷ்ணகிரி என்பதால் அங்குச் சென்று புகாா் தெரிவிக்கும்படி, கோவை போலீஸாா் அறிவுறுத்தியதையடுத்து கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையத்தில் அஸ்வின் செவ்வாய்க்கிழமை புகாரளித்தாா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் இந்த பணத்தை ஏமாற்றிய கும்பலைச் சோ்ந்தவா்கள் சிவகாசி, சென்னை, கோவை பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிருஷ்ணகிரி போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...