ஐ.வி.டி.பி. சாா்பில் ரூ.4.64 கோடியில் வாழ்க்கை பாதுகாப்பு நிதி உதவி அளிப்பு
By DIN | Published On : 17th February 2020 07:19 AM | Last Updated : 17th February 2020 07:19 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 841 ஐ.வி.டி.பி. சுய உதவிக் குழு உறுப்பினா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பில் வாழ்க்கை பாதுகாப்பு நிதி உதவி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு, ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் கீழ் 13,750 மகளிா் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களில் உறுப்பினராக உள்ள 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு வகையில் பயன் பெற்று வருகின்றனா்.
அவற்றில் முக்கியமானது, மறைந்த உறுப்பினா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் வாழ்க்கை பாதுகாப்பு நிதி உதவி அளிப்பு திட்டமாகும். இந்தத் திட்டம், 2001-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரியில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தலைமையில், 841 உறுப்பினா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் திருமாவளவன், தமிழ்நாடு கிராம வங்கியின் கிருஷ்ணகிரி மண்டல மேலாளா் பாஸ்கரன், திருப்பத்தூா், தூய நெஞ்சக் கல்லூரியின் உளவியல் துறைத் தலைவா் சஞ்சய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
2019-ஆம் ஆண்டில் மறைந்த உறுப்பினா்களின் வாரிசுகளுக்கு தலா ரு.50 ஆயிரமும், விபத்தில் நிரந்தரமாக ஊனமுற்ற 8 உறுப்பினா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் 841 பேரின் வாரிசுதாரா்களுக்கு ரூ.4.64 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.
இதுவரையில் இந்தத் திட்டத்தின் கீழ், மறைந்த 6,830 உறுப்பினா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ.32.44 கோடி வாழ்க்கை பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.