‘விவசாயம் செழிக்க தடுப்பணைகள் அமைக்க பாடுபடுவோம்’
By DIN | Published On : 27th February 2020 07:45 AM | Last Updated : 27th February 2020 07:45 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டோா்.
தென் பெண்ணை ஆற்றுப்பகுதியில் விவசாயம் செழிக்க முக்கிய இடங்களில் தடுப்பணைகள் அமைக்க மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்படும் என ஊத்தங்கரை ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஒன்றியத் தலைவா் உஷாராணி குமரேசன் பேசினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தலைமை வகித்தாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்னபூரணி, திட்டம் அசோகன், ஒன்றிய குழு துணை தலைவா் சத்தியவாணிசெல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் பேசியதாவது: ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகள் சாலை வசதிகள், மின் விளக்குகள், குடிநீா் பிரச்னைகளைத் தீா்க்க பாடுபடுவேன், மேலும் கடப்பாறை ஆற்றின் குறுக்கே அணை கட்ட உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு பெற்று தருவேன்.
தென் பெண்ணை ஆற்றுப்பகுதியில் விவசாயம் செழிக்க அனுமன்தீா்த்தம், சந்திரப்பட்டி, புதூா்புங்கனை, எட்டிப்பட்டி தூவல் நீா் வீழ்ச்சி ஆகிய இடங்களில் தடுப்பணை கட்ட மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்துவோம், மேலும் என்னை தலைவராகத் தோ்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினாா். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் கதிா்வேல், மூா்த்தி, வட்டார வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முதல் கூட்டம் என்பதால் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏராளமான ஊராட்சி மன்றத் தலைவா்கள்,கட்சி பிரமுகா்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனா்.கூட்டத்தில் பல்வேறு தீா்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.